நவராத்திரி…தில்லி,மைசூர்.

April 23, 2007

மஹாராஷ்ட்ராவில் சின்ன மண்கிண்ணங்களில் பாலிகைத் தெளித்து அதில் தானியங்களின் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து பின் விஜய தசமி அன்று கடலில் கலக்கிறார்கள் அந்தப் பாலிகையின் வள்ர்ச்சியைப் பார்த்து தங்கள் வாழ்க்கையை சிலர் எடை போடுகிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும். மஹாலட்சுமி கோவிலுக்கும் போய் பூஜை செய்கிறார்கள் இப்போது வருவது தில்லி உத்திர பிரதேசம். இங்கு இந்தப் பத்து நாட்களும் ராமர் ராவணனைக் கொன்ற சம்பவமாக எடுத்துக் கொண்டு தர்மம் வெல்லும் என்பதைக் காட்டுகிறார்கள இதில் முதல் நாளிலிருந்தே துளசிதாசரின் ராமாயண நாடகம் தயார் செய்து வெளி மைதானத்தில் நடத்துவார்கள் கூட்டம் தாங்காது ஸ்ரீராம் தியேட்டர் இதில் மிகப் பெருமை பெற்ற ஒன்று அந்த மைதானத்தில் மூன்று அசுர பொம்மைக்ளின் உருவங்கள் 40 அடி உயரத்தில் அமைத்து உள்ளே நிறைய வெடிகளைப் பரப்பி வைத்து விடுவார்கள். மிக்க ஆற்றலுடன் அழகாகத் தயாரிப்பார்கள அந்த மூன்று அசுரர்கள் கும்பகர்ணன இந்த்ர்ஜித் இராவணன் ஆவர் .கடைசிநாள் இராமர் ஒரு அழகான தேரில் வலம் வந்து இராவணைத் துரத்தி துரத்தி அம்பினால் அடிப்பார்கள், கூட அனுமானும் லட்சுமண்னும் இருப்பார்கள் இராவணனும் பெரியத் தேரில் நின்றுகொண்டே முன்னே ஓடுவான் அதன் பின் ஒரு அம்பு இந்திரஜித் மேலேவிழ அந்த பொம்மை அசுரன் மலைப்போல் சாய்வான் உள்ளே இருக்கும் வெடிகள் ஊரைகூட்டிவிடும் இதே போல் கும்பகர்ணனும் மடிவான். பின் ராமராக நடிப்பவர் மிகவும் குறி தவறாமல் அந்த இராவணனாக வடித்த பிரம்மாண்டமான பொம்மையின் மேல் வெகு தூரத்திலிருந்து அம்பு ஏவ அவனும் பூமியில் பெரிய சத்தததுடன் சாய்ந்து மடிவான் பல வெடிகள் உள்ளிருந்து வெடிக்க
பல வர்ணஜாலங்கள் நம்மை சிலிர்க்க வைக்க பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் பின் ஒரு ஒளி ஆகாயத்தில் போய்க் கலக்கும். ஆனால் வெடி வெடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும் அவ்வளவு ஓசை, பார்க்க மன ரஞ்சகமாக இருந்தாலும் சூழ்நிலை
மாசு படுகிறது. சுற்று புற வாயு தூயமையை இழக்கிறது மக்கள் பல

திண் பண்டங்களை தின்ற பின் அங்கேயே போட்டுவிடுவதால் அந்த பெரிய மைதானமும் குப்பைகளால் சூழப்படுகின்றன. இதெல்லாம்
தேவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது . அடுத்து வருவது மைசூர் தசராவுக்குப் பெயர் போனது இதைப் பார்க்க வெளி நாடுகளிருந்த்தும் வருகிறார்கள். சாமுண்டேஸ்வரி மகிஷாசுரனை வதம் செயததைக் குறித்து கொண்டாடுகிறார்கள். வரிசையாகக்
குதிரைப் படை
யானைப் படை ஆட்படைகள் அணிவகுத்து நிற்க அதன் மேல் அல்ங்கார
உடைகள் கண்ணைப் பறிக்க பல வாத்தியங்களின் இசை நம்மைக் கவர
ஊர்வலம் தொடங்குகிறது எல்லாம் வெண் புரவிகளாக் பார்க்கும் போது
எங்கே இந்திர சபையோ என்று எண்ணத் தோன்றுகிறது டக் டக் என்று குளம்பு ஒலி கிளம்ப அதன் நடை அழகை வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு! ஒரு யானையின் மேல் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள்… மைசூர் மஹாராஜா அரண்மணையிலிருந்து தொடங்கி மலை மேல் இருக்கும் சாமுண்டேச்வரி கோவில் வரை ஊர்வலம் செல்கிறது. முன்பு மஹாராஜாக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று வந்தார்கள்.
இப்போது கவர்னர் தொடங்கி வைக்கிறார், மாலை அரன்மனை பல வர்ண
விளக்குகளால் மின்னி பூலோகமா சுவர்க்க லோகமா என்று எண்ணத்
தோன்றுகிறது. இத்துடன் வாணவேடிக்கையும் சேர்நது மனது கொள்ளை போகிறது. மொத்தத்தில் மூன்றுதேவிகளும் சேர்ந்து ஒரு பராசக்தியாகி இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியின் இருப்பிடமாகி நம்மை பரிபாலிக்கிறாள்.


பாரதியார்: மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்… என்றும்
வாணி கலைத்தெயவம்! என்று சரஸ்வதியையும்
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி… என்று லட்சுமியையும்
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்…என்று
பார்வதியையும் நவராத்திரி பாடலாகப் பாடியுள்ளார்.
நாம் அந்த அன்பு என்னும் சக்தியை உணர்ந்து நம்மிடம் கலந்து
எல்லோரிடத்திலும் பரப்புவோமாக.
நான் நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியுள்ளேன் சில செய்திகள்
விட்டும் போயிருக்கலாம், நீங்களும் உங்கள் ஊரில் சிறப்பாக இந்த
நல்ல நாட்களைப் பற்றி எதாவது இருந்தால் எழுதவும் தெரிந்து கொள்ள
மிக ஆவல். பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி!

அன்புடன் விசாலம்.


அன்பே சிறந்த மருந்து

April 23, 2007

தொன்றுதொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத்தெருவிலும் வியாபித்து பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்… அப்பப்பா…என்ன இன்பம் நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைமாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். கடவுள் என்பது அன்பு என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரஹீம் என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.“அன்பிலர் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு,”

இது திருவள்ளுவரின் வாசகம். அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே… என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்கு சென்று விடுகிறார்கள். இங்கு பள்ளியிலிருந்து வந்த குழந்தை தாயின் அன்புக்காக ஏங்குகிறது. டி.வி.அந்த அன்பைத்தருமா? அப்பாவை தன் வருடாந்திர விழாவிற்கு வரும்படி மகன் அழைக்கிறான். “எனக்கு அர்ஜெண்ட் மீட்டிங் எனக்குவர இயலாது” என்கிறார் தந்தை. பையனுக்கு ஏமற்றம்தான். சந்தோஷம் என்பது பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை.குழ்ந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு கட்டாயம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தும். அவர்கள் ஆரோக்யமாய், வளர அன்பு கலந்த கண்டிப்பு தேவை. நமது உடலில் மிக சக்தி வாய்ந்த இடம் நமது தோல். அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதில் ஆறுலட்சம் திசுக்கள் உள்ளன. தொடு உணர்வு தோலில் செயல்பட்டு உடலில் பரவுகிறது. குழந்தை தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான். தாயின் அரவணைப்பு பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தை போக்குகிறது. நாம் நெற்றியினிலோ, கழுத்தின் பின்புறத்திலோ அல்லது தோளிலோ அன்பாக தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும். அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும்.

தனக்குத்தனே அன்பை செலுத்திக்கொள்ள்வேண்டும்.. நமது குறைகளையும், நிறைகளையும் கணக்கிட்டு ஒவ்வொரு நாளாக நிறைவுகளை அதிகப்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவர்களின் தவறுகளைக் கண்டுக்கொள்ளாது, அல்லது மன்னித்து இயல்பாக அன்பின் ஊற்றை பெருக்கவெண்டும்.

தன்னைத்தானே நேசித்து கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தைச் சுத்தமாக அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு ஊற்றாக பெருகி மற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி, அன்பு பாய்ச்ச அதைப் பெறுபவர் கோபநிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். குழந்தை தாயின் அன்புக்கு, பெற்றோர்கள்தன் பிள்ளைகளின் அன்புக்கு, காதலன் தன் காதலியின் அன்புக்கு, மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக்குழந்தைகளின் அன்புக்கு, நல்ல நட்புக்கு, கடைசியாக பக்தன் கடவுளின் அன்புக்காக… என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள். இந்த அன்பு கிடைக்கவிட்டால் தவறான பாதையில் மனிதன் இறங்குகிறான். இதன் விளைவாக விவாகரத்து கொலை, தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. மனிதனின் ஆரோக்யத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லை, மகிழ்ச்சியில்லை. மகிழ்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை.
ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்ல்ங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம் பண்பு இருந்தன. இப்போது அவைகள் எங்கே? தேடுவோம் அன்பை இணைப்போம்.

“துன்பம் இலாத நிலையே சக்தி,

தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி “

இந்த பாரதி மொழிந்த “அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம்”

அன்பே சிவம்!

விசாலம்.


சிவ மடம் – சிறுகதை!

April 23, 2007

ஆதவன் இளம் சிவப்பை அள்ளித்தெளித்து மறைந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை நான் ரசித்து கொண்டிருந்தேன். ‘வவ்… வவ்..’ என்ற இனிமையான சத்தம் என் காதில் விழுந்தது. நான் பால்கனியிலிருந்து இறங்கி கீழே வந்து அந்த திசையில் பார்த்தேன். ஆம்…அது நான் கட்டியிருக்கும் சிவமடத்திலிருந்து வந்தது. ஒரு பெரிய வேப்பமரம் நிழலை அள்ளிக்கொடுத்தது. அதற்கு கீழ் ஒரு மேடை,அந்த மேடைக்குக் கீழ் நான்கு அருமையான நாய்க்குட்டிகள் தங்கள் தாயிடம் பாலைக் குடித்துக்கொண்டிருந்தன. தாய் நாய் மிகவும் ஆசையாக் தன்னுடைய நாக்கால் நக்கிக்கொடுத்து தன் பாசத்தைக் காட்டியது. இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தேன்! தாய் பாசம் என்றாலே தனிதான்.அதில் ஒரு நாய் என்னை மிக கவர்ந்தது. கருப்பும், வெள்ளையும் கலந்தது அதன் உடல். நெற்றியில் நாமம் போல் கருப்புவண்ணம். அதை அள்ளி எடுக்கத்துடித்தது மனது. மெள்ள ஒரு கிண்ணத்தில் பால் எடுத்து வந்தேன். எனக்கு பிடித்த ஹீரோவிற்கு பாலைக்கொடுக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா நாய் குழந்தைகளைக் கொஞ்சியபின் சற்று வெளியே போயிற்று. நான் என்
மனம் கவர்ந்த ஹீரோவைத் தூக்கி அணைத்து பாலைக் கொடுத்தேன். அது தன் பிஞ்சு நாக்கால் நக்கி, நக்கி ஒரு இன்பமான சத்தத்தை எழுப்பி நடுநடுவே என்னையும் தன் ஒரக்கண்ணால் பார்த்தது. தன் சிறு வாலை ஆட்டி கறுப்புப்ட்டன் போன்ற கண்களை சுழற்றி… ஆஹா! என்ன கவர்ச்சி, என்ன அழகு! அப்படியேஅதன் வசமானேன்.
என் சிவமடத்திற்குள்தான் என் அருமை சிவா இருந்தது. நடந்து முடிந்த கதை. நான் இட்ட பெயர்தான். நான் வளர்த்த என் அருமை ஜெர்மன் ஷெப்பெர்டு, அது தான் சிவா. அதை நாய் என்று யாரவது சொன்னால் எனக்கு ஆகாது. அது என் குழ்ந்தை, அதன் மேல் அத்தனை பாசம். பத்து நாள் குட்டியாக் வந்தது… வளர்ந்தது.. அதை ஆன்மீகமாக வளர்த்தேன். அது முன்பிறவியில் சன்யாசியோ என்னமோ, வெளியே போனால் தன் இனத்துடன் சேர்ந்து ஓடாது. என் கூடவே இருக்கும். நான் கீதை படிக்கும் நேரம் மணி 9. அதுவும் என் அருகில் அமரும். முழு பூசையை கண் கொட்டாமல் பார்த்து ரசிக்கும். கற்பூரம் ஏற்றிய பின்னர் நான் அதன் கண்ணில் ஒற்றி விடுவேன் அது வரை அந்த இடத்தை விட்டு நகராது. பாட்டு ரசித்து கேட்கும். வெளியிலிருந்து வந்தால்நேரே பாத்ரூமுக்கு போய் நிற்கும். கால் அலம்பிய பிறகுதான் உள்ளே வரும் எல்லாம் பழக்கிவிட்டேன். ஒருதடவை ஒரு திருடன் உள்ளே நுழைந்தான்.அது கத்தி,குரைத்தது ஊரைக் கூட்டிவிட்டது. அவனிடைருந்து அடிகள் பெற்றும் அவனை எதிர்த்தது. அவன் ஒடிவிட்டான் நான் பள்ளியிலிருந்து திரும்பிவந்தவுடன் ஒரே ஷாக்!

அந்த சிவா என்னிடம் ஒடி வந்தது. நக்கியது தன் முதுகைக்காட்டி பல விஷயங்கள் சொல்லாமல் சொல்லியது. அந்த பாஷை எனக்கு புரிந்தது. டில்லியில் கொளுத்தும் வெய்யில். பத்து நாட்கள் சிம்லா போனபோது அந்தசிவாவை நாய் காக்கும் நிலயத்தில்விட,அது நாய் காக்கும் நிலையம் அல்ல பணம் பிடுங்கும் நிலையம் என்றுபிறகுதான் புரிந்தது. உஷ்ணம் தங்காமல்,தண்ணீருமில்லாமல் மஞசகாமலை வந்து என் சிவா என் மடிமேல் உயிரை விட்டது. முடிவு காலம் தெரிந்த உடனேயே ராமநாமம் பாட்டு போட காதில் ராம்,ராம் என்றுசொல்ல வாயில் கங்கை நீர் ஊற்ற என்னை நன்றியுடன் பார்க்க மறக்க முடியவில்லையே அந்த தினம். அந்த சமாதி தான் இந்தமடம் அதில் ஒரு வேப்பமரம் நட்டு மரமும் பெரிதாகிஅதன் நிழ்லில் இன்று பல பூனைக்குட்டிகள், நாய் குட்டிகள்… என் ஹீரோ புடவையைப் பிடித்து இழுக்க பழைய நினைவிலிருந்து விடுபட்டு என் ஜுனியர் சிவாவை வெளியிலிருந்தே வளர்க்க ஆரம்பித்தேன். அந்த நாளும் வந்தது. நான் கறிகாய் வாங்கச் சென்றேன் என் அருமை ஜுனியர் சிவா என்னைத்தொடர்ந்துவந்தது. “போ சிவா உன் அம்மாவிடம் போ! பால் குடி பாவம் அவள் உன்னைத் தேடுவாள். நான் திரும்பி வந்ததும் வா” என்றேன். ரொம்ப புரிந்தது போல் தன் முகத்தை ஒரு பக்கமாக சாய்த்து சம்மதம் தெரிவித்தது. வேக்மாக நான் என் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவந்தேன். பாவம் அது நடைப் பாதையில் எதிர்பக்கம் பொறுமையாக உட்கார்ந்திருந்தது. என் கையில் பிஸ்கட் இருந்தது.
மோப்ப சக்தியால் அது தெரிந்துகொண்டு ஆவலாக என்னிடம் வர வேகமாக குறுக்கே பாய்ந்தது. பீம்….பீம்…. அவ்வ்ளவுதான். நான் வீல் என்று கத்தினேன். கண்மண் தெரியாமல் வந்த காரின் அடியில் என் அருமை ஹீரோ! யமன் ரூபத்தில் வந்துவிட்டான். மனதை உருக்கும், உலுக்கும் கூக்குரல் என் ஹீரோ எழுப்ப ஒரே கூட்டம், கார் ஒட்டியவன் நிற்காமலே ஒடிவிட்டான். கார் ந்ம்பரைப் பார்த்தேன். அவன் தெரிந்தவந்தான். முன் வாரம் அஹிம்சையைப் பற்றி மேடையில் பேசினவன். பசுவதை சங்கத்தின் மெம்பர்… என் எதிரே ரத்தவெள்ளத்தில் என் ஹீரோ கிடக்க ஒரு சிலர் பாவம் என்று சொல்ல மற்றவர்கள்
ஏதோ நாயாம் அறைந்துவிட்டதாம் என்று சொல்லி அலட்சியமாக இடத்தைக் காலி செய்தார்கள். அதன் தாய் ஒடி வந்து, சுற்றி சுற்றி அதை முகர்ந்து அழுதது. பின்னர் அதை இழுத்து… இழுத்து சற்று ஒரமாகப் போட்டது. என் கண்களில் நீர் பொங்க தாய் நாயை தடவிவிட்டேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும்? மெல்லப்போய் என் ஹீரோவை ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்தேன். உயிர் போயிருந்தது. அதை மேலும் அறைய வைத்தோ அல்லது கழுகு கொத்திச்செல்லும் காட்சியைக் காணவோ எனக்கு மனதில் தெம்பு இல்லை. சீனியர் சிவாவின் அருகில் குழி தோண்டி உப்பும் பாலும் விட்டு அடக்கம் செய்தேன். மனம் கார் ஒட்டினவனை அசைபோட்டது லஞ்சம் ஒழிக்க மேடையில் பேசி அவனே லஞ்சம் வாங்குகிறான், மிருகவதை பற்றி பேசி அவனே மிருகத்தை அழிக்கிறான். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இது எங்கே போய் நிற்கும்? கடவுளே! உள்ளேவந்தேன். சுவரில் மாட்டிய கீதசாரம் என்னைப் பார்த்து சிரித்தது. “நீ என்னகொண்டு வந்தாய்? அதை இழப்பதற்கு” மனதைத் தேற்றிக்கொண்டேன்.போதும் அப்பா. இனி நாய் வளர்க்கவே மாட்டேன்.என் மனம் சொல்லியது.
பிரசவ வைராக்கியம் போலும். ஒரு வாரத்திற்க்குப் பின்னர் ‘வவ்..வவ்..’ இனிமையான குரல் ஒடினேன் பாலை எடுத்துகொண்டு. மாயை என் கண்ணை மறைத்தது. மூன்றாவது சிவா வந்து விட்டான். வளரப்போகிறான். வாழ்க சிவமடம்!
விசாலம்.


தாயானாலும் நான் தாயல்ல…

April 23, 2007

நான் ஒரு தாய்
ஆனால் நான் தாய் அல்ல ,
இர்ண்டு குழந்தைகள் பெற்றேன்
அழகு பெண் ஒன்று,
ராஜா போல் ஆண் ஒன்று,
ஆனாலும் கொஞ்ச
மகவுகள் இல்லை,
குழந்தைகள் தான் பெற்றேன்
ஆனால் கணவன் இல்லை
தாய்மை அடைந்தேன்
உடலில் இன்பம் இல்லை,
ஒரு உணர்ச்சியும் இல்லை ,
தலைவனின் த்ழுவல் இல்லை,
கொஞ்சலும் இல்லை
ஒரு ஊடலும் இல்லை
ஒரு சாடலும் இல்லை,
ஆனால் ராஜமரியாதை
கொடிக்கட்டி பறக்கும் எனக்காக
இரண்டு நாட்கள் பாலூட்டினேன்
உச்சி முகர்ந்தேன்.
குழந்தைப் பார்க்க,
வந்தனர் உறவினர்,
தம்பதி வந்தனர்,
க்ட்டி அணைத்தனர்.
இனிப்பு வழங்கினர்
நான் கட்டிலில்.
அநாதையாய்…
கண்களில் நீர் வழிந்தது
மனமும் கூட கனத்தது,
ஒரு மனிதன் வந்தான்,
கை கூப்பினான்
“நன்றி” என்றான்,
கையில் வைத்தான்
ஒரு ஐந்து லட்சம்.
முடிந்தது என் பங்கு,
பெத்துக் கொடுத்ததின்
பரிசு இது…
குழந்தையைப் பார்த்தேன்
முடிந்தது என் பங்கு
பின் நீ யாரோ?
நான் யாரோ?
என் தம்பியின் கல்லூரி
என் தங்கையின் திருமணம்,
காத்து நிற்கும் இந்தப் பணம்
ஊசியால் விந்து செலுத்த
வந்துதித்தாள் ஒரு தேவதை
அந்த தேவதைக்கு நான் தாய்,

ஒரு வாடகைத் தாய்
பிறக்கும் வரை எனக்கு சொந்தம்
முடிந்தபின் இல்லை பந்தம்…
அன்புடன் விசாலம்