ஒரு பெண் பார்க்கும் படலம்…
அதில் ஹீரோ நம் ரகுராமன். அந்தப்பையனும் அவன் பெற்றோர்களும் பல வருடங்கள் ஹைதராபாத்தில் வசித்து வரும் ஒரு குடும்பம். பெண் சாந்தி சென்னையைச் சேர்ந்தவள்… பையனின் அம்மாவுக்கு சங்கீதம் மிகவும் பிடிக்கும் என்று அறிந்து கொண்டு, சாந்தி சில பாட்டுக்களைக் கற்று கொண்டாள். பையன் அவன் அம்மா, அக்கா, அவள்புருஷன் என்று ஒரு சிறு கூட்டமே வந்திருநதது. “பெண்ணை வரச் சொல்லலாமே!” என்று ஒரு குரல் வந்தது, பெண்ணும் வந்தாள். அடுத்த கட்டமாக “பெண்னிற்கு பாட்டு தெரியுமோ?” என்று பையனின் அம்மா கேடக “நன்றாகபாடுவாள்! நிறைய பரிசுகள் பெற்றிருக்கிறாள்” என்று பெருமிதமாக கூறினாள். “சரி பாடும்மா”என்று சொல்ல ஒரு சுருதிப் பெட்டியும் வர பாட்டு ஆரம்பமாகியது, “ஒரஜுபுஜூ செதிநியாயமா… ஓரகோத்தமா நிவண்டி வானிகி…”என்ற பாடல், இது ஸ்ரீ தியாகராஜர் ஸ்ரீராமரைப் பார்த்து பாடியது கன்னட கௌளை ராகம், அழகான பாடல், அதன் அர்த்தம் “ஹே ராமா! ஏன் என்னை இப்படி ஓரக்கண்ணால் பார்க்கிறாய்? இது நியாயமா? ஓ ரகோத்தமா… வேகமாக வந்து அருள்செய்!” என்பது போல் பாட்டு மேலே போகிறது. அந்தப் பெண்ணிற்கு சுத்தமாய் அர்த்தம் தெரியாது. தெலுங்கும் தெரியாது அவள் பல சங்கதிகளுடன்
ஓ ரகோத்தமா என்று பாடப்பாட அந்தப் பையன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து புன்னகை புரிந்தான். அவனுக்கு தெலுங்கு தண்ணீர் பட்ட பாடு, இதைக் கவனித்த அந்த அம்மா,
“என்ன இது எத்தனைக் காலமாக இந்தக் காதல்? இந்தப் பெண் அத்தனைப் பாட்டையும் விட்டு விட்டு இந்தப் பாட்டை உனக்காக பொறுக்கி எடுத்திருக்கிறாள். ஓரக்கண்ணால் பார்ப்பது நியாயமா? என்றும் கேட்கிறாள் நீயும் அவளை ஓரக்கண்ணால் பார்க்கிறாய்”
என்று கத்த அந்தப் பெண்ணிற்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு அத்திம்பேர் அதற்குள் உங்களுக்கு தெரியாத காதல் போல் இருக்கிறது. காலம் கெட்டு கிடக்கு. யார் கண்டா…இந்தப்பெண் என்று இழுக்க அந்தப் பெண் அழ ஆரம்பித்து விட்டாள். பின் மத்யஸ்தம் செய்ய வந்தார் ஒரு நல்லவர். இவர்களுக்கு தெலுங்கு அறவே தெரியாது அந்தப் பிள்ளையை அவள் பார்த்தது கூட இல்லை என்று நிரூபித்து விளக்கம் கொடுத்தார். அந்தப் பையனும் “அம்மா என்னைப் பலதடவைகள் ஓரக் கண்ணால் பார்க்கிறாயே ரகு என்று பாட என் பெயரும் வந்ததால் எனக்கு சிரிப்பு வந்தது” என்று விளக்கினான்.
அந்த அம்மா தன் அவசர புத்தியினால் வந்த விளைவுக்கு வருந்த ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்தது. நலங்கின் போது நம் கதாநாயகி பாடிய பாட்டும் இது தான் ஆனால் நம் ரகு இப்போது அவளை ஓரக்கண்ணால் பார்க்காமல் நன்றாகவே ரசித்து பார்த்தான்.
அன்புடன் விசாலம்
அர்த்தம் புரியாத பாட்டு..!
April 20, 2007பாதைகள் இரண்டு!
April 20, 2007நடந்தான் வழிப்போக்கன்,
நடந்துகொண்டே இருந்தான்
பார்த்தான் இரண்டு பாதைகளை
திரும்புவது எங்கே? குழம்பினான்,
தலையைச் சொறிந்தான்
ஊரே அடங்கி இருந்தது
கடவுள் வந்தார்,“என்னப்பா தம்பி
திசை தெரியவில்லையா?”
வ்ழிப்போக்கன் கேட்டான்.
“இரண்டு பாதைகள் உள்ளதே!
எங்குபோவது?”
கடவுளின் பதில்
“உனக்கு எது பிடித்ததோ அதில் நட”
கூர்ந்து பார்த்தான்
கண்ணில்பட்டது
நல்ல செப்பனிட்ட பாதை ஒன்று
அடுத்து இருந்தது கல் முள் அடங்கிய பாதை
நடந்தான் நல்லபாதையிலே
போனான்… போனான்… போய்க்கொண்டே இருந்தான்.
கடைசியில் நரகம் தெரிந்தது.
வியந்து நின்றான்
மீண்டும் வ்ந்தார் கடவுள்
“என்ன கடவுளே! நியாயமா இது?
நரகத்திற்குப் போக இவ்வளவு நல்ல பாதையா?
சுவர்க்கத்திற்குப் போக முள்ளும் கல்லுமா?
“அட முட்டாள் மனிதா
பலகோடி மனிதர்கள்வருவது நரகம்
பாவம் அவர்கள் நடகக நல்லபாதை வேண்டுமே!
சுவர்க்கத்திற்கு ஏதோ ஒருவர்
அத்தி பூத்தாற்போல் வருகிறார்.
அவர் லட்சியம் ஒன்றுதான்
கடவுளை காணவேண்டும்
தன் இலட்சியம் நிறைவேற
முள் என்ன கல் என்ன
உயிரையே கொடுப்பார்களே
அதான் அந்தப் பாதை சீராக்கவில்லை”
புன்னகையுடன் மறைந்தார் கடவுள்
விசாலம்
மஹாலட்சுமியே வருக!
April 20, 2007ஸ்ரீனிவாசன்…ஸ்ரீ என்றால் லட்சுமி… வாசன் என்றால் திருமகளைத் தனது மார்பில் வைத்திருக்கும் மஹாவிஷ்ணு, அவள் அங்கு நித்தியம் வாசம் செய்கிறாள் பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கிடைந்த போது ஜகஜ்ஜோதியாய் வெளிப்படுகிறாள் திருமகள், அவள் அழகே அழகு! எல்லோரையும் கொள்ளைக் கொண்டது, அவளை அடைய வேண்டும் என்று எல்லோரும் துடித்தனர். ஆனால் திருமகளோ ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடையவேண்டும் என்று தவம் இருக்கிறாள். அவள் நினைத்தபடியே ஸ்ரீ மகாவிஷ்ணு அவளைத்தன் மார்பில் அமர்த்திக் கொள்கிறார். அந்த நாள் சித்திரை மாதம் வளர்ப்பிறை திருதியை, இதுதான் அக்ஷயதிருதியை என்கிறார்கள். க்ஷயம் என்றால் தேய்வு, அக்ஷ்யம் என்றால்வளர்தல் பெருகுதல் நிறைதல் என்று சொல்லலாம். இன்றைய தினம் எந்த நல்லகாரியங்கள் செய்தாலும் அது வளரும் என்ற நம்பிக்கை, ஒன்றுக்குப் பத்தாக பத்து நூறாக நூறு ஆயிரமாகப் பெருகும். அதனால்தான் பெண்களின் கூட்டம் தங்கக் கடைகளில் அலை மோதுகிறது. சரியான சுயநலம்! இன்றைய தினம் யாராவது தங்கக் காசு வாங்கி ஒரு ஏழையின் தாலி செய்யக் கொடுக்கிறார்களா? அப்படி இருந்தால் அதுதான்உண்மையான ‘அக்ஷ்யதிருதியை’ இன்றையதினம் மஹாவிஷ்ணு லட்சுமி சமேதராக பூஜை செய்கிறார்கள். குளித்த பின் நுனி இலைப் போட்டு அதில் அரிசி பரப்பி கலசம் வைத்து, பின் கணபதி பூஜை செய்து கலசப் பூஜையும் செய்து பின் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படித்து பாயசம் நைவேத்தியம் செய்வார்கள். ஒரு படி நிறைய நெல்லும் வைப்பார்கள் இன்றைய தினம் நிறைய வஸ்திர தானம் அன்னதானம் போன்று செய்தல் நலம். வியாபாரிகள் வியாபார நோக்கோடு விளம்பரம் செய்து இன்று பொன் வாங்கினால் வருடம் முழுதும் பொன்னாக நிறையும் என்று பேராசையை வளர்த்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். என்றுதான் பெண்கள் தங்கம் என்று அலைவதை விட்டு போதுமென்ற மனமே… என்று இருப்பார்கள். இதற்கு சிலவு செய்வதை விடபொதுநலத் தொண்டில் ஈடுபடலாமே! நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே சங்குசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷமி நமோஸ்துதே!
அன்புடன் விசாலம்
Posted by annaiyinarul
Posted by annaiyinarul 
Posted by annaiyinarul