மே தினம்-எல்லாமே இனிப்புத்தான்!

April 30, 2007

முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே ஒரு அன்புப் பிணைப்பு, விசுவாசம், நேர்மை முதலியவைகள் இருத்தல் மிக அவசியம்.முதலாளிகளும் தொழிலாளிகளின் குடும்பத்தைத் தம் குடும்பமாகவே பார்த்தல் வேண்டும். அவர்களுக்கு மிக இன்றியமையாத வீடு, குழந்தைகளுக்குக் கல்வி ஆரோக்கியமான சூழ்நிலை, மருந்துகள்
வாங்க வசதி, ஓய்வு பெற்றவருக்கு ஒய்வூதியம், மருத்துவம் விடுமுறை, விடுதி, முதலியவைகளை ஏற்படுத்தி,வருடம் இரு முறை அவர்களுடன் கலந்து சுற்றுலா சென்று , ஜாதி பேதம் அந்தஸ்து பார்க்காமல் அவர்களுடன் கேளிக்கைகளில் பங்கு கொண்டு ஒரே குடும்பமாக பார்த்தால் தொழிலின் வளர்ச்சிப் பெருகும். அது பெருகினால் நாட்டின்
பொருளாதாரம் பெருகும். இந்த விஷயத்தில் சக்தி மசாலா கம்பெனி, ராம்கோ நிறுவனங்கள், விகேயென் நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்றவர்களைப் பாராட்ட வேண்டும், அவர்கள் தொழிலுடன் சேர்ந்து நாட்டிற்கு தொண்டும் செய்கிறார்கள்.
வாழ்க தொழிலாளர் தினம்!
ஒரு கவிதை தொழிலாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்

உழைக்கும் வர்க்கம் வியர்வை சிந்த
தனி நிர்வாகம் அவர்களை மேலும் உந்த,
வேலையில் ஒரே கட்டுப்பாடு,
தினக் கூலியிலும் குறைபாடு,
அடிமையாக்கி அவர்களை மிரட்ட,
சிக்கல்கள் அங்கு பின்னிக் கொள்ள,
போராட்டங்கள் தலை தூக்க,
இரு வர்க்கத்தின் உறவுக் குன்ற,
வந்தது முடிவில் கதவடைப்பு,
ஒரு பெரிய அடி ஏழை வயிற்றில்,
குழந்தைகளோ நடுத் தெருவில்,
இத்தகைய நிகழ்ச்சி…
பொருளாதார வீழ்ச்சி…
வாழ்வுக்கொரு தாழ்ச்சி…
உரிமைகளை நிலை நாட்ட…
வன்முறைகள் தலை தூக்க…
ஒரு பெரிய பூட்டு கதவில் சிரிக்க…
மனதிலே அழுகிறான்…
நேர்மை உழைப்பாளி…

வளரும் தொழிற்சாலை
நல்லிணக்கத்தால்,
உயரும் அது
நல்லுறவுகளால்,
தவறுக்கு தேவை ஒரு மன்னிப்பு,
மெமோ நோட்டீஸ் புறக்கணிப்பு
இணக்கம் குறைவதில்லை,
இயக்கம் நிற்பதில்லை,
உருவாக்கம் பன்மடங்கு பெருக…
ஆர்வம் அங்கு போட்டி இட…
வளர்ச்சிக்கு அன்பு உரம் போட்டு…
ஆரோக்கியப் போட்டி வளர்க்க…
மனம் நிறைந்த தொழிலாளி…
மனம் ஒன்றிச் செயல்பட…
உற்பத்தி பெருகும்,
பொருளாதாரம் சீர்படும்,
தேவை தொழிலாளிக்கு…தொழிலில் அக்கறை!
வேண்டும் முதலாளிக்கு… அவர்களின் அக்கறை!
இரண்டும் நிலைத்தால்
சிரிதளவும் கசப்பல்ல
எல்லாமே இனிப்புத்தான்

வாழ்க தொழிளாளர்களின் தினம்!
தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்!
அன்புடன் விசாலம்


ஒரு ஆடு மனம் திறக்கிறது

April 30, 2007

ஆடி மாதம் வந்து விட்டால்,
அம்மன் கோவிலில் கொண்டாட்டம்,
எங்கள் வாழ்க்கை ஒரு பந்தாட்டம்,
எங்கள் இனத்திற்கு திண்டாட்டம்,
என் வயிற்றில் புளியைக் கரைக்க,
என் மகனை நான் தேடுகிறேன்,
இன்னும் எங்கே போனான் அவன் .
புல் மேய இவ்வளவு நேரமா?
திண்டாடிப் போனேன்
மனம் தவித்தேன்
ஓடி வந்தான் என் மகன்,
க்ழுத்தில் பூ மாலை நெற்றியில் மஞ்சள்,
கொம்பின் நடுவில் குங்குமம்
அழகாக மின்னினான் .

“அம்மா! எனக்கு பிறந்த நாளா?
ஏன் எனக்கு இந்த அலங்காரம்?”


மனதிற்குள் அழுதேன் அவனை நினைத்து

“மகனே உன் பிறந்த நாளில்லை இது
இன்று உன் மரண நாள்”
ஒன்றும் புரியாமல் அவன் விழித்தான்
நான் மே,,,மே,,, என்று அலறினேன்,
காந்தியை அழைத்தேன். கேட்டேன்
பார்த்தாயா? உன் அஹிம்சைக் கொள்கையை,
கீழே இறங்க முடியாமல் மேலிருந்தே வேதனைப்பட்டார்,
புத்தர், மகாவீரர், அன்னை தெரசா
என்று பலபேர் வந்து வந்து போனார்கள்.
என் கண் முன்னே.,
அவர்கள் பரப்பிய அஹிம்சை எங்கே?
ஜீவ காருண்ய தத்துவம் எங்கே ?
மனிதனின் சுய நலத்திற்கு
எங்கள் கழுத்தில் கத்தியா?
உங்கள் விரதம் நிறைவேற்ற
எங்கள் உயிர் தேவையா?
பலி கொடுக்கும் மக்களே
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
போன உயிர் திரும்புமா
அதைக் கொடுக்கத்தான் முடியுமா?
விசாலம்


ராம நாமம் ஒரு வேதமே!

April 30, 2007

அன்பு குழந்தைகளே! கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள்

ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சதர், ஸ்ரீ ஸ்யாமா சாஸ்த்திரி ஆவர். இதில் ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும். அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள். அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடக்கும். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார். சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார். ஒரு சமயம் அவர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இடத்தில் ஒரே கூட்டம், என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான் என்று தெரிய வந்தது. அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன் அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான், இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள்சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான். ஆனால் அந்தக் கோவில் உள்ளே தாழிடப்பட்டிருந்தது.என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளே குதித்து, பின் உள் இருக்கும் தாழ்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே குதித்தான். அவ்வளவுதான் டம் என்ற சத்தத்துடன் கிணற்றில் விழுந்து விட்டான். நீரில் மூழ்கி தத்தளித்து செத்துப்போனான். அவள் மனைவி வாசலில் தன் கணவன் இவ்வளவு நாழியாகியும் வெளியில் வரவில்லையே என்று கவலையுடன் அழுது ஊரைக் கூட்டினாள். எல்லோரும் கோவில் உள்ளே தேடி பின் அவனை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள். அவன் கழுத்தில் துளசி மாலை இருந்தது. அவன் சிறந்த விஷ்ணு பகதன் என்று தியாகராஜஸ்வாமிக்குத் தெரிந்து,
பின் “நா ஜீவோ தாரா”என்று தெலுங்கில் ஒரு பாட்டு, அதாவது அந்த மனிதனின் உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார். அந்த உயிர் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர் பெற்று நின்றான். என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை!
இப்போது புரிகிறதா? “ராம நாமம்” ஒரு சிறந்த மந்திரம் இதை
எப்போதும் ஜபிக்கலாம். படுக்கையிலும் ஜபிக்கலாம் அதன் சக்தியே தனி வாருங்கள் நாமும் ராம நாமம் சொல்லலாமே..!

அன்புடன்… அம்மம்மா விசாலம்.


இப்படியும் ஒரு வெறியா?

April 30, 2007

“மியாவ்…மியாவ்” பூனைக்குட்டிகளின் இனிய குரல் என்னைக் கதவைத் திறந்து பார்க்கச் செய்தது. மெல்லக் கதவைத் திறந்தவுடன் ஒரு அழகான காட்சி, தாய்ப்பூனை தன் குட்டிகளை நக்கிக் கொடுக்க மற்ற குட்டிகள் பால் குடித்துக் கொண்டிருந்தன.

“சாமபல் நிறம் ஒரு குட்டி வெள்ளை நிறம் ஒரு குட்டி” என்று அழகோ அழகு! நான் ஒரு அகண்ட பாத்திரத்தில் பால் எடுத்து வந்தேன். அம்மா பூனை என்னைப் பார்த்து சீறியது என்ன பாதுக்காப்பு! என்ன பாசம்! அம்மா என்ற சொல்லே பாசம் தானோ? எல்லாக் குட்டிகளும் பயந்து தன் அம்மாவிடம் அடைக்கலம் புக, ஒன்று வாலின் பக்கம் போய் ஒளிய மற்றொன்று முதுகின் பின் ஒளிந்து என்னை ஓரக்கண்ணால் பார்த்த பார்வை என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. அதில் ஒரு குறும்புக்காரக் குட்டி கறுப்பும் வெள்ளையும் கலந்த அழகு என் முன்னால் வந்து என் புடவையின் கீழ் பாகத்தை நகத்தால் இழுத்தது, கீறியது, அது என் குழந்தை ஆகிவிட்டது. பிரிக்க முடியாத ஒரு பந்தம்… நாட்கள் ஓடின இப்போது நானும் அந்தக்குட்டியும் ரொம்ப நெருக்கம் ஆகிவிட்டோம். இப்போது அதன் பெயர் “தக்காளி” அது என்ன வேடிக்கையானப் பெயர்? ஆம் அது ஒரு நாள் தக்காளிப் பழத்தை பந்தாடி நசுக்கிவிட்டது அன்றைய தினமே பெயர் சூட்டுவிழாவும் நடந்தது. நான் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவேன். அதன் அம்மாவும் இப்போது என்னுடன் பழக ஆரம்பித்தது. எல்லாக்குட்டிகளுக்கும் படுக்கை அறை மொட்டை மாடிதான். ஒரு நாள் இரவு நான் சற்று கண் அயர்ந்தேன், அபோது ஒரு பயங்கரமானச் சத்தம். ஒரு பெரிய கடுவன் பூனைக் கத்த அதற்கு பதில் அந்தப் பெண் பூனைக் கொடுக்க, எனக்கு மொழி புரிய வில்லையே! ஆனால் என்ன என்று ஊகித்துக் கொண்டேன். மேலே செடி வைத்த மண் செட்டி உருள ஒரே அமர்க்களம்தான். காலையில் போய் பார்த்தேன். மண் செட்டி உடைந்து கிடந்தது என் அருமை தக்காளியும் இல்லை மற்ற குட்டிகளும் இல்லை. எங்கே போய்விட்டன? ஒன்றும் புரியவில்லை ஒரே ஏக்கத்துடன் கீழே வந்தேன். என் கணவரிடம் சொன்னேன்.”சனி விட்டது” என்று அவர் சொல்ல எனக்கு அழுகையே வந்து விட்டது. நேரே கடவுள் படத்திற்கு முன் வந்து மனம் உருகப் பிரர்த்தித்தேன். “என் தக்காளி நல்ல படியாக வந்து சேர அருள வேண்டும் அம்மா…” காலை மணி 6 ” மியாவ்” என்ற சததம் தேன் போல் பாய நான் போட்டியில் ஓடும் பெண்போல் ஓடி கதவைத் திறக்க, “வாடா கண்ணா” என்று அதை அள்ள… ஒரு பாச உணர்வு மின்சாரம் போல் பாய்ந்தது. வந்தது அந்த நாள்… அந்த இரவு… பௌர்ணமி நிலா தன் ஒளியை வீசிக் கொண்டிருந்தது. அந்தக் கடுவன் திரும்பவும் வந்தது மதில் சுவர் மேல் உட்க்கார்ந்து பெண் பூனையை முறைத்துப் பார்த்தது கூப்பிட்டது. அதன் குரலே தனி தான் பெண்பூனைக்கு இஷ்டமில்லை, இதெல்லாம் நான் ஒரு இடுக்கால் பார்த்தேன் திரும்பவும் எதாவது பிரச்சனை வரக் கூடாதே என்று…
அந்தக் கடுவன் ஒரேப் பாய்ச்சலாக அந்தப் பெண் மேல் பாய்ந்தது. நான் என் சன்னலைத் திறந்து சூ சூ என்று விரட்டினேன். அது என்னைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றது. காலை ஒரு மூன்று மணி இருக்கும். “மியாவ்” என்ற அலறல்… என்னைத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் எழுந்திருக்க மனமில்லாமல் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கிவிட்டேன். காலை முதல் வேலையாகக் கதவைத் திறந்தேன் “வீல்”என்று அலறி விட்டேன். நான் பார்த்தது… அப்பப்பா…சொல்ல முடியவில்லையே! என் அருமை தக்காளி வயறு கிழிந்து குடல் வெளிவர இரத்த வெள்ளத்தில் கிடந்தது. அதன் அம்மா அதைச் சுற்றிச் சுற்றி வந்து நக்கியது. புரிந்து கொண்டேன் அந்தக் கடுவன் தன் இச்சைப் பூர்த்திக்கு பெண் இசையாததால் ஏமாற்றம் அடைந்து வஞ்சனையுடன் குட்டியின் காரணத்தினால் அம்மா பூனை வர மறுக்கிறாள் என்று கோபம் கொண்டு அதற்குக் காரணமாய் இருந்த குட்டியை கிழித்து சாக அடித்து விட்டது. அழுதபடி நான் அதை ஒரு பழைய துணியில் சுற்றினேன். வெளியில் போட்டால் நாய் கவ்விக் கொண்டுப் போகுமே என்று மண்ணில் புதைத்தேன். இன்று அதன் மேல் ஒரு தக்காளிச் செடி வளர்ந்து விட்டது.

அன்புடன் விசாலம்


சித்திரா பௌர்ணமி..!

April 30, 2007

சித்திரா குப்தம் மஹா பிராஜ்னம்
லோகாகி பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம் .
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்,
எந்தக் காரியாலயத்திலும் அல்லது கம்பெனிகளிலும் கணக்கு சரி பார்க்க ஒருஆடிட்டர் தேவைப்படுகிறார். இவர் வரவு சிலவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரியாக இல்லை என்றால் அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையும் கிடைக்கிறது. அபராதமோ அல்லது கோர்ட்டுக்கோ போகவேண்டி இருக்கும். அதே போல யமலோகத்திற்கும் ஒரு ஆடிட்டர் தேவைதானே… எத்தனைக் கோடி மக்களுக்கு பாப புண்ணியக் கணக்கு எழுத வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையும் அமையும். யமலோக ஆபீஸில் ஆடிட்டர் சித்திர புத்திரன். இந்தச் சித்திர புத்திரன் பற்றி இரண்டு விதமான புராணங்கள்…
உலகத்திற்கெல்லாம் ஈசன் சிவபெருமான் ஒருதடவை ஏடும் எழுத்தும் கொண்டு கணக்கு எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். அதன்படி ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட ஒரு தேவதைத் தோன்றினாள். அவளிடமிருந்து ஒரு அழகான புத்திரன் வர சித்திரத்திலிருந்து வந்ததால் சித்திரப் புத்திரன் என்று அழைக்கப்படலானான். இதே சித்திரப்புத்திரன் மீண்டும் ஒருமுறை சிவனருளால் காமதேனுவிற்குப் பிறந்து இதே பெயர் பெற்றார். இவனுக்கு எல்லோருடைய பாப புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலையைச் சிவபெருமான் கொடுக்க அதைப் பாரபட்சமில்லாமல் இவர் செய்து வருகிறார். குப்த் என்றால் ரகசியம்… நமது பாப
புண்ணியங்களின் ரிகார்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யமதர்ம ராஜா முன்னிலையில் பூத உடலைவிட்டு வரும் மனிதர்களின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து ஒப்பிக்கிறார். அதற்குத் தகுந்தாற்போல் விளைவும் ஏற்படுகிறது. கேது கிரஹத்திற்கு சித்திரபுத்திரன் அதிதேவதை.
இன்னொரு புராணம்… ஒருசமயம் நீளாதேவி ஒரு அப்ஸரஸ் சூரியனின் அழகில் காதல் கொண்டு தன்னை இழந்தாள். அதனால் சூரியப்பிரகாசம் கொண்ட மிகுந்த அறிவாளியாக ஒரு குழந்தை சித்திரை மாதம் சித்திரா நட்சத்திரத்தில் பௌர்ணமி அன்று பிறந்தது. சிறந்த கல்விமானாக விளங்கி பிரும்மாவிற்கு சிருஷ்டி வேலையில் உதவ ஆரம்பித்து.
கொஞ்சம் கொஞ்சமாக தானே அந்த வேலையைச் செய்ய ஆரம்பித்தார் இதனால் தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு “எங்கே பிரும்மாவின் வேலையையும் இவர் முழுவதும் எடுத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது? “என்று தயங்கி சூரியனிடம் முறையிட்டனர். சூரியன் தந்தை ஆனதால் சித்திர புத்திரனிடம் நயமாகப் பேசி இதைவிடச் சிறந்த வேலை ம்க்களின் பாப புண்ணியக் கணக்கு எழுதுவது என்றுச் சொல்லி அந்த வேலையைச் செய்யுமாறு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு சித்திரபுத்திரன் அந்தவேலையை இப்போதும் செய்துவருகிறார்.
இந்த நாளில் விரதம் எடுத்து பூஜை செய்பவர் அத்ற்கென்று தனிக்கோலம் போட்டு, தெற்குப் பக்கம் மூடி உள்ளே சூரிய சந்திரரின் படம் வரைந்து, நடுவில் சித்திரபுத்திரனின் படம் வரைந்து, ஒரு கையில் எழுத்தாணியும் மற்றொரு கையில் ஏடும் வரைந்து
வழிபடுவாரகள். உப்பு இல்லாத உண்வு உண்டு பின் ஒரு மாணவனுக்கு பள்ளி நோட்டு புத்தகமும் பேனாவும் தானம் செய்வார்கள்.
இந்தப் புராண்ங்களை ஒரு பக்கம் ஒதுக்கினாலும் ‘நமக்கு மேலும் ஒருவனடா அவன் நாலும் தெரிந்த கலைஞனடா’ என்றபடி நாம்ம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நன்மையோ தீமையோ விளைவுகள் உண்டு. இதைத்தான் ‘விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமோ?’ என்பார்கள் ஆகையால் எப்போதும் ஒரு விழிப்புணர்வோடு நல்லெண்ணங்களோடு அன்பு உள்ளத்துடன் கடமைகளைச் செய்து வந்தால் புண்ணியமே சேரும்.
இந்தியாவில் தெந்நாட்டில் காஞ்சியில் நெல்லுக்கார வீதியில் இவர் ஒரு கோவிலில் இருக்கிறார். சித்திரா பௌர்ணமி அன்று இவருக்குத் தனி பூஜை உண்டு.
“சித்திரைப் பருவந்தன்னில் உதித்த நற் சித்ரகுப்தன்,
அத்தின அவனை உன்னி அர்ர்சனைக் கடன்களாற்றில்,
சித்தியும் பெறுவர் பாரந்தீருமே எமந்தன்னூரில்
இத்திறன் அறிந்தேயன்னோன் இரங்குவான் அரங்கள் சொற்றே”

அன்புடன் விசாலம்


ஒரு மரத்தின் நிழலில் யோகம்

April 30, 2007

naan1.jpg

இது என் கதை! இந்தப்புகைப் படத்தில் இருப்பதும் நான் தான், ரகு அமர்ந்திருக்கும் இடம் லோதி பூங்கா. தில்லியில் மிகப் பிரசித்தமான பூங்காவனம். சிறுவர்கள், காதலர்கள் கிழவர்கள்,தம்பதிகள்,என்று எல்லோரும் மன மகிழும் இடம்.இந்தக் கதையின் கதாநாயகன் இப்போது எண்பது வயதுக்கிழவன். அது நான் தான். வெள்ளைத் தாடியுடன் சமூக சேவை செய்து வருகிறேன். இப்போதும் என் மாணவர்களுக்காக காத்து இருக்கிறேன். தனிமையிலும் இனிமை காணுகிறேன். சமயவெறியை ஒழிக்க முயலுகிறேன். என்னை மசூதியிலும். குருத்வாராவிலும், கோவில்களிலும் காணலாம். எம்மதமும் சம்மதமே.. எனக்கும் குடும்பம் இருந்தது, நானும் காதலித்தேன். அந்தப்பழைய மறக்கமுடியாத சம்பவங்கள் தினமும் என் கண்முன்னே வருகிறது. சொல்கிறேன்.. கேளுங்கள்.
என் தந்தையை இழந்து நான் தில்லிக்கு ஒடி வந்தேன். மொழி தெரியாத ஊர் துணிச்சலுடன் வந்து இறங்கி ஒரு அறையில் இருக்கும் போது ஒரு சீக்கியக் குடும்பம் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. அப்போதுதான் என் அவளைச் சந்தித்தேன். அவள்பெயர் பஜன்கௌர், அவள் வீட்டில் வாடகைக்கு இடமும் அளித்து, சாப்பாடும் தந்து, வேலையும் வாங்கிக் கொடுத்தாள். நாட்கள் ஓடின. அவள் எனக்கு இந்தி கற்றுக்கொடுத்தாள். நான் அவளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க. எங்கள் காதல் வளர்ந்தது. இந்த மரம் எங்கள் காதலை வாழ்த்தியது. எங்கள் பெயர்களை இந்த மரத்தில் செதுக்கியும் வைத்தோம். எங்கள் கல்யாணமும்  நிச்சயமானது. நானும் அவளும் சுவர்க்கத்தில் மிதந்தோம். என் அவள் கராச்சியிலிருக்கும் தன் தாத்தாவிடம் ஆசீர்வாதங்கள் வாங்கி வர தன் ஆசையை

என்னிடம் தெரிவித்தாள் நானும் அவள் தங்கையுடன் அவளை அனுப்பி வைத்தேன். என் கண்முன்னே அந்த பயங்கர நாள் ஞாபகம் வருகிறது… கராச்சியில் ஒரு சிறு வீடு, ஒரே இருள். ஊரே அடங்கிப் போயிருந்தது.  இந்து- முஸ்லிம் இடையே மனக்கசப்பு, ஒரு சலசலப்பு இருந்த நேரம். அழுது வடிந்து இருக்கும் அந்த வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது. “ஸர்தார்ஜி ஜல்தீ கோலோ கோன் ஹெய்” என்று ஒரு வயதான் முதியவர் கதவைத்திறந்தார். பழைய கால கதவு… “கிரீச்” என்னும் சப்தம் ஒரு பீதியை உண்டு பண்ணியது.”அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் எந்த ஒரு சப்தமும் முகம்மதியர் கூட்டம் வந்து விட்டதோ என்ற பயத்தை உண்டு பண்ணியது. ”நான் தான் அப்துல்”என்றபதில் கிழவருக்கு ஒரு தெம்பைக் கொடுத்தது. என் அன்பு பஜனின் தாத்தாதான் அவர். அப்துல் தான் எவ்வளவு உதவுகிறான் “இந்து முஸ்லிம்  பாயி பாய்” என்பது அவனுக்குத்தான் மிகப் பொருந்தும் சிறு வயதில் அனாதையாகத் தெருவில் மயங்கிக் கிடந்த அப்துலை ஸர்தார் கிஸன்சிங் வளர்த்தார். தன் இரு பேத்திகளும் அவனைத் தங்கள் தம்பியாக நினைத்து கையில் ராக்கி கட்டினர். அன்றைய தினத்திலிருந்து ஸ்ர்தார்ஜிக்கு அவன் தான் வலது கை. இந்து முஸ்லிம் மதவெறியில் நிம்மதி குலைந்தது. நிம்மதியாக வாழ்ந்த குடும்பத்தில் இடி விழுந்தது. அடுத்த மாதம் திருமணம் எப்படி என் பேத்திகள் தில்லி போகப் போகிறார்கள் என்று கலங்கினார். தாத்தா.. “பாயாஜி… அவசரமான, கவலைக்கிடமான தகவல்… எப்படிச் சொல்வேன்? நேற்று அடுத்தத் தெருவில் ஒரு கூட்டம் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை நாசம் செய்து பெண்களின் கற்பையும் அழித்துவிட்டனராம் எந்த நேரமும் நம் வீட்டிற்குள் வரலாம்” கேட்டுக்கொண்ட பெரியவரின் கண் கலங்கியது. ”கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் அப்துல், நாளை இரவுக்குள்ளொரு டெம்போ ஏற்பாடு செய்து அவர்களூக்கு பர்தா அணிவித்து அழைத்துப் போகிறேன். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்” பாசத்துடன் அவன் சொன்னது அவருக்கு தெம்பைத்தந்தது. பஜன்கௌர் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். “சிவப்பு புடவையில் நான் உங்கள் கைப்பிடிக்க நீங்கள் கனிவாக என்னைப் பார்க்க, அந்த நாளுக்கு ஆசையுடன்…
காலடிச் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள். பாசமுள்ள தாத்தா நின்றார். “காதல் கடிதமா? எழுது… எழுது நாளை அப்துல் உங்களை அழைத்துப் போவான். பர்தா அணிந்து தயாராக இருங்கள். யாருக்கும் சந்தேகம்
வராமல் நடந்து கொள்ளுங்கள்…” ஆகட்டும் தாத்தா. மனதிற்குள் மகிழ்சி பொங்க உறங்கப் போனாள் மறு நாள். இரவு பத்து மணியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.
டிக் டிக் என்ற கடிகாரம் ஒசையைத்தவிர வேறு ஒன்று கேட்கவில்லை. அந்த நிமிடமும் வந்தது,
கதவு திறக்கப்பட்டது, அப்துல் ரகசியமாக இரண்டு பர்தாக்களைக் கொடுத்தான். வாசலில் வண்டியும் இருந்தது. அப்துல் முகத்தில் ஒரு பெருமிதம் தன் இந்து சகோதரிகளைக் காப்பாற்றுகிறோம் என்ற பெருமை. ஆனால் அந்தப் பெருமை ஒரு நாலு நிமிடங்கள்தான் நீடித்தது. தப…தப… என்று ஒரு கூட்டம் ஓடி வரும் சத்தம் கேட்டது. அப்துல் உள்ளே வ்ந்து கதவை மூடிக்கொள்வதற்குள் ஒரு நான்கு முகமதியர்கள் ஓடி வந்தனர். கதவை வேகத்துடன் உதைத்தனர். அப்துலை ஒரு தள்ளு தள்ளினர், அவன் கீழே விழுந்தான். கிழவர் வேகமாக உள்ளறைக்குப் போனார், பேத்திகளைப் பார்த்தார். கற்பு.. கற்பை தன் எதிரிலேயே பேத்திகள் இழ்ப்பதா? கற்பழிக்கும் காட்சி தன் முன்னே ஒடியது தன் கத்தியை எடுத்தார் “சதக்” ஒரே குத்து…. ரகு தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு பஜன் கௌர் கீழே சாய்ந்தாள். ரத்தம் மணப் பெண்ணின் புடவைப்போல அவளை அலங்கரித்தது. தங்கைப் பார்த்தாள். தன் கற்பு பறிக்கப் படுமோ என்று பயந்தாள். “சதக்”கீழே இருந்த கத்தியால் தன்னையே குத்திக் கொண்டாள். தாத்தா இந்தக் காட்சியை காணமுடியாமல் பேத்திகள் மேல் சாய்ந்தார். ஒருதிருப்தியுடன்.  கற்பைக் காப்பாற்றிய நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது.
“என்ன அப்துல்என் ஆசை பஜன் எங்கே?அழைத்து வரவில்லையா?”” மௌனமாக் கண்ணீருடன் பஜனிடமிருந்த அந்த கீதையின் சாரத்தைக் காட்டினான். “எதைக் கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு?”
என் கதை முடிந்தது. சமூக சேவை அவள் நினைப்பில் செய்கிறேன் மனம் நிறைகிறது. இப்போது இந்த மரம் தான் என் சமூகச் சேவையின் கூடம் மரத்தின் நிழலில் தான் யோகம். அவளும் என்னுடன் இருக்கிறாள்.


வாழ்க வளமுடன்…
விசாலம்


அதிதியின் மகனே ஆதவனே !

April 25, 2007

                     suryan.jpg

அதிதியின் மகனே ஆதவனே                              

ஏழு குதிரையில் வருபவனே

மழை கொடுத்து வளம் செய்பவனே  

தேஜஸ்வரூபியே வேதவாகனனே  

கிரணங்களைப் பரப்புபவனே,  

கிரஹங்களுக்குத் தலைவனே

இருள் யானைக்குச் சிங்கமானவனே,  

உலகத்தின் கண்ணானவனே சனிக்

கிரஹத்தின் தகப்பனே,

வியாதியைப் போக்குபவனே,

திருஷ்டியைத் தெளிவாக்குபவனே

உடலில் ஒளியைக் கொடுப்பவனே

காயத்திரி மந்திரத்தில் ஒளிர்பவனே

எங்கள் மனதின் இருளை நீக்கி

ஞானம் என்ற ஒளியைத் தா!  

“ஆதித்யஹிருதயம் புண்யம் சர்வசத்ரு வினாசனம் ஜயாவஹம் ஜபேன் நித்யம் அக்ஷய்யம் பரமம்சிவம்”

சூரியனுடைய ஹிருதயத்தில் வசிக்கும் ஸ்ரீ பகவானுடைய அனுக்கிரஹம் கொடுக்கும் இந்தத் தோத்திரத்தை நித்தியம் படித்தால் சத்ருக்கள் அழிவார்கள். எப்போதும் ஜயமுண்டு!
புண்ணியம் கிடைக்கும் என்று ஸ்ரீ அகஸ்திய மகா முனிவர் ஸ்ரீ ராமருக்கு இராவணனை வதம் செய்யும் முன் சொல்லித்தந்த மந்திரம். ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தில் வருவது, நாமும் இன்றைய பொங்கல் தினத்திலாவது இதைப் படிக்கலாமே!
அன்புடன் விசாலம்


“ஸ்வீட் சாப்பிடாதே…!”

April 24, 2007

பம்பாயில் நான் இருக்கும் போது, நான் ஒரு நாடகக் குழுவில் இருந்தேன். எல்லோரும் அதில் பெண்கள்தான். அநேகமாக ஒரு ஆணின் வேஷம் எனக்குத்தான் இருக்கும். என் உடல் வாகைப் பார்த்து கொடுத்தார்களோ என்னமோ? ஆனால் அதில் எனக்கு ஒரு திருப்தி,
ரொம்ப நாளாக் pants shirts போட ஆசை இருந்தது ஆனால் வீட்டில் கேட்க பயம். அவர்கள் குழந்தைகள் நலத்திற்காக சற்று கண்டிப்பாக் இருந்தவர்கள் நல்ல விதைத்தால் தானே நல்ல பயிர். பெற்றோர் சொல் மீறாத பெண் நான். ஆகையால் அதை அப்படியே விட்டு விட்டேன். நல்ல வேளையாக நாடகத்தில் ஆண்கள் வேஷ்த்தில் நான் என்ற போது மனத்தில் ஒரு மகிழ்ச்சி! எங்கள் நாடகம் சுமார் 2 மணி நேரம் செல்லும்.
கூட்டம் நிறைய வரவேண்டுமே! என்று பெரிய நாடக கம்பெனி குழுவை வரவழைத்து 5 நாடகங்களுக்குள் ஒரு நாடகமாக எங்கள் நாடகம் திணிக்கப்படும் 6 நாடகத்தின் சீசன் டிக்கெட் விற்கப்படும்.
ஒரு சமயம் மறைந்த திரு.சஹஸ்ரநாமம் குழு பாரதி கலா மன்றத்தில் நாடகம் அரங்கேற்ற வந்திருந்தது மூன்று நாடகங்கள் முடிந்தவுடனே எங்கள் யாவருக்கும் நிலா சாப்பாடு! ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்து சாப்பாடு ஆனதால் நிறைய ஐட்டம் இருந்தது. அப்பொது என் அருகில் பிரமிளா என்ற் தேவிகா நடிகை உட்கார்ந்திருந்தார். நடிகர் முத்துராமன்
வி.கோபாலகிருஷ்ணன் போன்றவரும் இருந்தனர் நிலா சாப்பாடு தரையில் ஜமக்காளம் விரித்து நடந்தது. எல்லோரும் நாடகத்தைப் பற்றி தமாஷாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருமதி.தேவிகாவிற்கு சாப்பிட எது வந்தாலும் “கொஞ்சமாக சாப்பிடு ஸ்வீட் சாப்பிடாதே! என்று சஹஸ்ரநாமம் அவர்கள் சொல்லி வந்தார். நான் வியந்து அவரிடம்”ஏன் இப்படி சொல்லுகிறீகள் பாவம்! தேவிகா நன்றாக சாப்பிடட்டுமே” என்றேன், அதற்கு அவர் “விசாலம் நாளை ‘போலீஸ்காரன் மகள்’ நாடகம் அதில் தேவிகா மயங்கி விழும் போது நான் தான் அவளைத் தூக்க வேண்டும். எடை கூடினால் எப்படித் தூக்குவது?” என்றார். எல்லொரும் சிரித்தனர். பல வருடங்கள் ஆனாலும் நடிகர் சஹஸ்ரநாமத்தின் நடிப்பும் அவர் நல்ல மனதும் பசுமையாக இன்றும் இருக்கிறது . நாடகம் போது சிறு தவறுகள் ஏற்படும். நடக்கும் தெரு காட்சியில் நாற்காலி தங்கிவிடும். சில சமயம் பூந்தொட்டி எடுக்க மறந்து விடும். அப்போது வசனத்தில் இல்லாததை நாமே அதற்கு பொருத்தமான வசனத்தை நுழைத்து பார்க்கிற்வர்களுக்கு தெரியாதபடி
சாமர்த்தியமாக நடந்த்துக் கொள்ள வேண்டும்.நாடகக் கலை மிக சிறந்த கலை அதற்கு முன்னளவு வரவேற்பு இல்லை. நாடகம் முன்பு போல் வளர அன்னையின் அருள் கிடைக்கட்டும்.


விசாலம்


நவராத்திரி…தில்லி,மைசூர்.

April 23, 2007

மஹாராஷ்ட்ராவில் சின்ன மண்கிண்ணங்களில் பாலிகைத் தெளித்து அதில் தானியங்களின் பசுமையான வளர்ச்சியைப் பார்த்து பின் விஜய தசமி அன்று கடலில் கலக்கிறார்கள் அந்தப் பாலிகையின் வள்ர்ச்சியைப் பார்த்து தங்கள் வாழ்க்கையை சிலர் எடை போடுகிறார்கள். அவர்களும் மும்பாதேவி கோவிலுக்கும். மஹாலட்சுமி கோவிலுக்கும் போய் பூஜை செய்கிறார்கள் இப்போது வருவது தில்லி உத்திர பிரதேசம். இங்கு இந்தப் பத்து நாட்களும் ராமர் ராவணனைக் கொன்ற சம்பவமாக எடுத்துக் கொண்டு தர்மம் வெல்லும் என்பதைக் காட்டுகிறார்கள இதில் முதல் நாளிலிருந்தே துளசிதாசரின் ராமாயண நாடகம் தயார் செய்து வெளி மைதானத்தில் நடத்துவார்கள் கூட்டம் தாங்காது ஸ்ரீராம் தியேட்டர் இதில் மிகப் பெருமை பெற்ற ஒன்று அந்த மைதானத்தில் மூன்று அசுர பொம்மைக்ளின் உருவங்கள் 40 அடி உயரத்தில் அமைத்து உள்ளே நிறைய வெடிகளைப் பரப்பி வைத்து விடுவார்கள். மிக்க ஆற்றலுடன் அழகாகத் தயாரிப்பார்கள அந்த மூன்று அசுரர்கள் கும்பகர்ணன இந்த்ர்ஜித் இராவணன் ஆவர் .கடைசிநாள் இராமர் ஒரு அழகான தேரில் வலம் வந்து இராவணைத் துரத்தி துரத்தி அம்பினால் அடிப்பார்கள், கூட அனுமானும் லட்சுமண்னும் இருப்பார்கள் இராவணனும் பெரியத் தேரில் நின்றுகொண்டே முன்னே ஓடுவான் அதன் பின் ஒரு அம்பு இந்திரஜித் மேலேவிழ அந்த பொம்மை அசுரன் மலைப்போல் சாய்வான் உள்ளே இருக்கும் வெடிகள் ஊரைகூட்டிவிடும் இதே போல் கும்பகர்ணனும் மடிவான். பின் ராமராக நடிப்பவர் மிகவும் குறி தவறாமல் அந்த இராவணனாக வடித்த பிரம்மாண்டமான பொம்மையின் மேல் வெகு தூரத்திலிருந்து அம்பு ஏவ அவனும் பூமியில் பெரிய சத்தததுடன் சாய்ந்து மடிவான் பல வெடிகள் உள்ளிருந்து வெடிக்க
பல வர்ணஜாலங்கள் நம்மை சிலிர்க்க வைக்க பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் பின் ஒரு ஒளி ஆகாயத்தில் போய்க் கலக்கும். ஆனால் வெடி வெடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டுதான் பார்க்க வேண்டும் அவ்வளவு ஓசை, பார்க்க மன ரஞ்சகமாக இருந்தாலும் சூழ்நிலை
மாசு படுகிறது. சுற்று புற வாயு தூயமையை இழக்கிறது மக்கள் பல

திண் பண்டங்களை தின்ற பின் அங்கேயே போட்டுவிடுவதால் அந்த பெரிய மைதானமும் குப்பைகளால் சூழப்படுகின்றன. இதெல்லாம்
தேவையா என்றும் எண்ணத் தோன்றுகிறது . அடுத்து வருவது மைசூர் தசராவுக்குப் பெயர் போனது இதைப் பார்க்க வெளி நாடுகளிருந்த்தும் வருகிறார்கள். சாமுண்டேஸ்வரி மகிஷாசுரனை வதம் செயததைக் குறித்து கொண்டாடுகிறார்கள். வரிசையாகக்
குதிரைப் படை
யானைப் படை ஆட்படைகள் அணிவகுத்து நிற்க அதன் மேல் அல்ங்கார
உடைகள் கண்ணைப் பறிக்க பல வாத்தியங்களின் இசை நம்மைக் கவர
ஊர்வலம் தொடங்குகிறது எல்லாம் வெண் புரவிகளாக் பார்க்கும் போது
எங்கே இந்திர சபையோ என்று எண்ணத் தோன்றுகிறது டக் டக் என்று குளம்பு ஒலி கிளம்ப அதன் நடை அழகை வர்ணிக்க முடியாது. அவ்வளவு அழகு! ஒரு யானையின் மேல் அம்பாள் அலங்கரிக்கப்பட்டு ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறாள்… மைசூர் மஹாராஜா அரண்மணையிலிருந்து தொடங்கி மலை மேல் இருக்கும் சாமுண்டேச்வரி கோவில் வரை ஊர்வலம் செல்கிறது. முன்பு மஹாராஜாக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று வந்தார்கள்.
இப்போது கவர்னர் தொடங்கி வைக்கிறார், மாலை அரன்மனை பல வர்ண
விளக்குகளால் மின்னி பூலோகமா சுவர்க்க லோகமா என்று எண்ணத்
தோன்றுகிறது. இத்துடன் வாணவேடிக்கையும் சேர்நது மனது கொள்ளை போகிறது. மொத்தத்தில் மூன்றுதேவிகளும் சேர்ந்து ஒரு பராசக்தியாகி இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியின் இருப்பிடமாகி நம்மை பரிபாலிக்கிறாள்.


பாரதியார்: மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்… என்றும்
வாணி கலைத்தெயவம்! என்று சரஸ்வதியையும்
பொன்னரசி நாரணனார் தேவி புகழரசி… என்று லட்சுமியையும்
மலையிலே தான் பிறந்தாள் சங்கரனை மாலையிட்டாள்…என்று
பார்வதியையும் நவராத்திரி பாடலாகப் பாடியுள்ளார்.
நாம் அந்த அன்பு என்னும் சக்தியை உணர்ந்து நம்மிடம் கலந்து
எல்லோரிடத்திலும் பரப்புவோமாக.
நான் நேரில் பார்த்து அனுபவித்ததை எழுதியுள்ளேன் சில செய்திகள்
விட்டும் போயிருக்கலாம், நீங்களும் உங்கள் ஊரில் சிறப்பாக இந்த
நல்ல நாட்களைப் பற்றி எதாவது இருந்தால் எழுதவும் தெரிந்து கொள்ள
மிக ஆவல். பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி!

அன்புடன் விசாலம்.


அன்பே சிறந்த மருந்து

April 23, 2007

தொன்றுதொட்டு அன்பைப் பற்றி எல்லா மதத்திலும் பேசப்பட்டு வருகிறது. வீட்டில் அன்பு ஊற்று ஆரம்பித்து அது பெருகி அண்டை வீட்டிற்கும் பரவி, அந்தத்தெருவிலும் வியாபித்து பின் தொகுதி, நாடு என்று பரவிக்கொண்டே போனால்… அப்பப்பா…என்ன இன்பம் நினைக்கவே மனம் மகிழ்கிறது. ஆனால் அந்த அன்பு கைமாறு இல்லாத அன்பாக இருக்க வேண்டும். அன்பே சிவம் என்கிறது இந்து மதம். கடவுள் என்பது அன்பு என்று கிருத்துவர்கள் சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் ரஹீம் என்று அழைக்கிறார்கள். அதாவது அன்பும் கருணையும் மிக்கவர் என்று அர்ததம்.“அன்பிலர் எல்லாம் தமக்குரியர், அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு,”

இது திருவள்ளுவரின் வாசகம். அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும்? குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, நவீன வசதிகள் கொடுத்துவிட்டோமே… என்ற திருப்தியுடன் அலுவலகத்திற்கு சென்று விடுகிறார்கள். இங்கு பள்ளியிலிருந்து வந்த குழந்தை தாயின் அன்புக்காக ஏங்குகிறது. டி.வி.அந்த அன்பைத்தருமா? அப்பாவை தன் வருடாந்திர விழாவிற்கு வரும்படி மகன் அழைக்கிறான். “எனக்கு அர்ஜெண்ட் மீட்டிங் எனக்குவர இயலாது” என்கிறார் தந்தை. பையனுக்கு ஏமற்றம்தான். சந்தோஷம் என்பது பணம் சார்ந்த நிலையன்று. அது மனம் சார்ந்த நிலை.குழ்ந்தைகளுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவை. அதிக கண்டிப்பு கட்டாயம் நேர்மாறான விளைவை ஏற்படுத்தும். அவர்கள் ஆரோக்யமாய், வளர அன்பு கலந்த கண்டிப்பு தேவை. நமது உடலில் மிக சக்தி வாய்ந்த இடம் நமது தோல். அது நமது உடல் முழுவதும் வியாபித்திருக்கிறது. அதில் ஆறுலட்சம் திசுக்கள் உள்ளன. தொடு உணர்வு தோலில் செயல்பட்டு உடலில் பரவுகிறது. குழந்தை தாயைக் கட்டி அணைப்பது இதனால்தான். தாயின் அரவணைப்பு பாசத்தை வெளிப்படுத்துகிறது, பயத்தை போக்குகிறது. நாம் நெற்றியினிலோ, கழுத்தின் பின்புறத்திலோ அல்லது தோளிலோ அன்பாக தடவினால் முரண்டு பிடிக்கும் குழந்தையும் நம் வழிக்கு வரும். அன்பு செலுத்த நம்மிடம் அன்பு குறையாமல் ஊற வேண்டும்.

தனக்குத்தனே அன்பை செலுத்திக்கொள்ள்வேண்டும்.. நமது குறைகளையும், நிறைகளையும் கணக்கிட்டு ஒவ்வொரு நாளாக நிறைவுகளை அதிகப்படுத்தி குறைகளைக் குறைத்து மற்றவர்களின் தவறுகளைக் கண்டுக்கொள்ளாது, அல்லது மன்னித்து இயல்பாக அன்பின் ஊற்றை பெருக்கவெண்டும்.

தன்னைத்தானே நேசித்து கடவுள் கொடுத்த இந்த ஆலயத்தைச் சுத்தமாக அன்பினால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதன் பின் தான் நமது அன்பு ஊற்றாக பெருகி மற்றவர்களிடம் பாயும். கோபம் என்ற சொல்லை நம் மன அகராதியிலிருந்து அகற்றி, அன்பு பாய்ச்ச அதைப் பெறுபவர் கோபநிலையில் இருந்தாலும் சாந்தமாவார். தோளைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னால் அதன் சுகமே தனி இல்லையா?

ஒவ்வொரு மனிதனும் அன்புக்கு ஏங்குகிறான். குழந்தை தாயின் அன்புக்கு, பெற்றோர்கள்தன் பிள்ளைகளின் அன்புக்கு, காதலன் தன் காதலியின் அன்புக்கு, மனைவி கணவனின் அன்புக்கு, தாத்தா பாட்டி தன் பேரக்குழந்தைகளின் அன்புக்கு, நல்ல நட்புக்கு, கடைசியாக பக்தன் கடவுளின் அன்புக்காக… என்று எல்லோரும் அன்பினால் வசப்படுகிறார்கள். இந்த அன்பு கிடைக்கவிட்டால் தவறான பாதையில் மனிதன் இறங்குகிறான். இதன் விளைவாக விவாகரத்து கொலை, தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. மனிதனின் ஆரோக்யத்திற்கு அன்பு இன்றியமையாதது. அன்பு இல்லை, மகிழ்ச்சியில்லை. மகிழ்சியில்லை என்றால் ஆரோக்கியம் இல்லை.
ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்க்கையில் சுவையில்லை. அன்பு குறைவினால்தான் இன்று பல முதியோர் இல்ல்ங்கள் பெருகி வருகின்றன. முன்பு இருந்த கூட்டுக் குடும்பத்தில் அன்பு, பாசம் பண்பு இருந்தன. இப்போது அவைகள் எங்கே? தேடுவோம் அன்பை இணைப்போம்.

“துன்பம் இலாத நிலையே சக்தி,

தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி

அன்பு கனிந்த கனிவே சக்தி “

இந்த பாரதி மொழிந்த “அன்பு கனிந்த சக்தியை உருவாக்குவோம்”

அன்பே சிவம்!

விசாலம்.